புதிதாக தொடங்கப்பட உள்ள மாதிரி பள்ளிகளில் சேர நுழைவு தேர்வா?

சென்னை: அடிப்படை மதிப்பீட்டு தேர்வு என்பது நுழைவு தேர்வு என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிப்பு ... பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரிகளில் இடம்பெறுவதை இலக்காக கொண்டு நான் முதல்வன், செம்மொழி பள்ளிகள், மாதிரி பள்ளிகள் ஆகிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாணவரும் பள்ளி படிப்பிற்கு பிறகு உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும், வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


எனவே இதன் வாயிலாக தங்களுக்கு அருகில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பல்வேறு படிவுகள் குறித்தும், அந்நிறுவனங்களின் ஆய்வகங்கள் உள்ளிட்ட சிறப்பு வசதிகளையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர். தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த ஐஐடி, ஜேஇஇ, கிளாட், என்.ஐ.டி போன்ற அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 4000 மாணவர்கள் பள்ளி கல்வித்துறை கொடுத்த ஊக்கம் மற்றும் பயிற்சி காரணமாக தேர்வு எழுதியுள்ளனர். அதில் வெற்றிபெற்று பல நூறு மாணவர்கள் அடுத்த நிலைகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்த முன்முயற்சிகளின் அடுத்த கட்டமாக அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில், ஆர்வமும் திறமையும் உடைய மாணவர்களை தொடர்ச்சியாக பயிற்றுவிக்கவும், தேவையான அனைத்து உதவிகளை செய்யவும், மாணவர்கள் விருப்பப்படும் உயர்கல்வி நிறுவனங்களை சென்றடையும் வரை நீடித்த தொடர் கவனிப்பும், வழிகாட்டுதலும் வழங்கவும் மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்த இருப்பதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நுழைவுத் தேர்வு நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை” என் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.