இலங்கை முன்னாள் கடற்படை தளபதி பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைப்பு

அமெரிக்கா: இலங்கை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், அவர் குறித்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘தீவிரமான மற்றும் நம்பகத்தன்மையுடன்’ இருப்பதாகவும், ஆளுநரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.