நிரம்பியதால் பாகூர் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்

ஏரி நிரம்பியது... பாகூர் ஏரியின் நீர் மட்டம் 3.42 மீட்டரை எட்டிய நிலையில், அரங்கனுார் கலிங்குகள் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது.

புதுச்சேரியில் நிவர் மற்றும் புரெவி புயல்களை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரியின் நீர் மட்டம் முழு கொள்ளவான 3 மீட்டரை எட்டியது. இதனையடுத்து, பாகூர் ஏரியில் அதிக பட்ச நீர் பிடிப்பு அளவான 3.6 மீட்டர் வரை நீர் மட்டத்தை உயர்த்த பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து அரங்கனுாரில் உபரி நீர் வெளியேறும் பகுதியான கலிங்குகளில் தலா 20 செ.மீ, உயரமுள்ள 3 நீர் தடுப்புகளை போட்டு, அதிகப்பட்ச நீரை சேமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், பாகூர் ஏரிக்கு பங்காரு வாய்க்கால் வழியாக நீர் வரத்து இருந்து வருகிறது.

இதனால், பாகூர் ஏரியின் நீர் மட்டம் 3.42 மீட்டரை எட்டிய நிலையில், நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால், அரங்கனுார் கலிங்குகள் பகுதி வழியாக, உபரி நீர் வெளியேறி வருகிறது. ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால், பொதுப் பணித்துறை ஊழியர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.