புழல் ஏரியிலிருந்து பிற்பகல் 3.00 மணிக்கு உபரி நீர் திறப்பு

புரெவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 19 அடியை தாண்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.

முதற்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி நீர் புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்.

புழல் ஏரி தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.