கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது; போப் பிரான்சிஸ் கண்டனம்

கறுப்பினத்தை சேர்ந்தவர் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவை உலுக்கி வருகிறது. போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில் ஆப்பிரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு (46) சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இன பாகுபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகளை சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவத்துக்கு, போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'இன வேறுபாட்டை சகித்துக்கொள்ள முடியாது; கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. எந்த வகையிலும், இன பாகுபாட்டை ஏற்க முடியாது' என, அவர் தெரிவித்துள்ளார்.