கொரோனா குறித்து டிரம்பின் தவறான தகவல் பதிவை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நேற்று முன்தினம் ‘பாக்ஸ் அண்ட் பிரண்ட்ஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தபோது, நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நேரம் இது. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எதிர்ப்புச்சக்தியை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த பேட்டி அடங்கிய வீடியோ தொகுப்பை அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டார். தற்போது ‘பேஸ்புக்’ நிறுவனம் இந்த வீடியோ தொகுப்பை நீக்கியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த வீடியோவில் குழந்தைகள் கொரோனாவில் இருந்து எதிர்ப்புச்சக்தியை பெற்றிருக்கிறார்கள் என்ற தவறான கருத்து இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை அகற்றும் வரையில் டிரம்ப் பிரசார கணக்கை முடக்குவதாக கூறி, டிரம்ப் மீது டுவிட்டரும் நடவடிக்கையில் இறங்கியது. இதுகுறித்து டுவிட்டர் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜனாதிபதி டிரம்பின் பதிவு, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தவறான தகவல்கள் பற்றிய எங்கள் கொள்கையை மீறுவதாகும். இந்த பதிவை அவர் திரும்பப்பெற வேண்டும். அதன்பின்னர்தான் இனி அவர் பதிவிட முடியும் என்று கூறினார்.

தற்போது இந்த பதிவு திரும்பப்பெறப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் பொது சுகாதார நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.