மதுரையில் இன்று முதல் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.500 அபராதம்

மதுரை: நாடு முழுவதும் கொரோனா பெரும்தோற்று பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதேபோன்று, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இதையடுத்து, மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன்படி, நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மேலும்,மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு தீவிரமுடன் பரவி வரும் சூழலில், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களின் நுழைவாயிலில் நுழைபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். கிருமிநாசினி வைக்க வேண்டும்.

மேலும், பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருக்கும் நபர்களுக்கு பொது சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மதுரையில் முக கவசம் அணியாமல் தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுவோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.