மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 40). பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி வீட்டில் இருந்த 9 வயதான தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

அப்போது வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த அவரது மனைவி இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அவரது மனைவி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்சை கைது செய்தனர்.

சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜேம்சுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து சேலம் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.

தீர்ப்பை கேட்டதும் ஜேம்ஸ் கோர்ட்டில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த கோர்ட்டு ஊழியர்கள் அவரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். மயக்கம் தெளிந்த அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சத்தம் போட்டார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.

இதனிடையே தீர்ப்பு குறித்து கேள்விப்பட்ட அவரது தாய் மற்றும் 2 சகோதரிகள் என 3 பேரும் கோர்ட்டுக்கு வந்தனர். அவர்களும் கோர்ட்டு வளாகத்தில் கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் போக்சோ கோர்ட்டுக்கு வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் ஜேம்சை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.