இரண்டு வாரங்களுக்கு பிறகு கடலுக்கு சென்று அதிக மீன்களுடன் கரை திரும்பிய மீனவர்கள்

வங்கக்கடலில் உருவான புயல் மற்றும் மழை காரணமாக கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாகவே பாம்பன் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இயல்புநிலை திரும்பியுள்ளதை தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு பிறகு மீண்டும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுக பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 100 விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் அதிகமான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர்.

இந்த மீனவர்கள் நேற்று மீன்களுடன் கரை திரும்பினார்கள். இரண்டு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்று வந்ததில் மீனவர்களது ஒவ்வொரு படகிலும் சீலா, தடியன், முண்டக்கண்ணி பாறை, மாவுலா, சாவாலை உள்ளிட்ட பலவகை மீன்கள் அதிக அளவில் கிடைத்திருந்தன. ஆனால் மீன்கள் குறைந்த விலைக்கு போனதால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வெறிச்சோடி காணப்பட்ட துறைமுக பகுதி மற்றும் கடற்கரையானது, நேற்று மீனவர்கள் மற்றும் வியாபாரிகளால் பரபரப்பாக காணப்பட்டது. அதுபோல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்று வந்துள்ள பாம்பன் மீனவர்களுக்கும் அதிகமான மீன்கள் கிடைத்துள்ளன.

இதுபற்றி பாம்பன் விசைப்படகு மீனவர் பேட்ரிக் கூறும்போது, புயல் சின்னம் கரையை கடந்த இரண்டு வாரத்திற்கு பிறகு பாம்பனில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வந்துள்ளோம். ஒவ்வொரு படகுக்கும் மீன்பிடிக்க சென்று வர ரூ.1 லட்சம் வரை செலவாகியுள்ளது. கடல் பகுதிகளில் மழை பெய்து நல்ல தண்ணீர் கடலில் சேர்ந்துள்ளதால் எதிர்பார்த்ததைவிட பலவகை மீன்கள் அதிகம் கிடைத்துள்ளன. மீன்கள் அதிகம் கிடைத்திருப்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மீன்களுக்கு சரியான விலை இல்லாமல் குறைந்த விலைக்கு போனதும், ஐஸ்கட்டிகள் தட்டுப்பாடு ஏற்பட்டதும் ஏமாற்றம் தான்” என்றார்.