பக்தர்கள் இல்லாமல் வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை கொடியேற்றம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்து உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும். செப்டம்பர் மாதம் 8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம்.

கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் பரவுவதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி தேவாலயத்தில் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது.

நாளை 29-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது.

நவ நாட்களில் ஒவ்வொரு நாளும் தேர்பவனி ஆலயத்தை சுற்றியும் நடைபெறும். செப்டம்பர் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா, சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு அன்னையின் கொடி இறக்கப்படும். தொடர்ந்து தமிழில் திருப்பலியுடன் அன்னையின் ஆண்டு விழா நிறைவடையும்.