தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 779 கனஅடி தண்ணீர் வந்தது. இதனிடையே அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி மாலை 5 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக அதிகரித்தது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 800 கனஅடி தண்ணீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றை கடக்க வேண்டாம் என்றும், கால்நடைகளை தென்பெண்ணையாற்றில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.