தொடர்ந்து பெய்யும் கனமழையால் வெள்ளப்பெருக்கு; மீட்பு பணிகள் மும்முரம்

கனமழையால் வெள்ளப்பெருக்கு... கேரளாவில் பெய்துவரும் அதிதீவிர கனமழையால், முக்கிய அணைகள், ஆறுகள் போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜூன் பருவமழை தொடங்கிய போதும் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு இல்லாததால், நடப்பாண்டில் பருவமழை பொய்த்துவிட்டதாகவே கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் கேரளாவின் பல்வேறு இடங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

இதனால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து, முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும், தொடர் மழையாலும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதனிடையே கனமழையோடு, சூறாவளி காற்றும் வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பங்கள் முறிந்தும் விழுந்துள்ளன. மீட்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.