தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கலெக்டர் ஆய்வு

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியதை பார்வையிட்ட திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:- பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது வினாடிக்கு 4,680 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் 1,500 கன அடி தண்ணீர் சேர்வலாறு அணைக்கு திருப்பி விடப்படுகிறது. இதேபோன்று கடனாநதி அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், அந்த அணையில் இருந்து வினாடிக்கு 950 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது வெள்ள அபாயம் இல்லை. அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து, நீர்வரத்து அதிகரித்தால், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க உதவி கலெக்டர், தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 40 சதவீத குளங்கள் நிரம்பியுள்ளன. கால்வாய்களில் அடைப்பு ஏற்படாதவாறு தூர்வாரி பராமரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகள் சற்று மோசமாக உள்ளது. மழைக்காலம் முடிந்ததும் சாலைகள் புதிதாக அமைக்கப்படும். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றி திரியாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.