சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நேற்று உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு துறையின் நியமன அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என். ராஜா, என்.எஸ். ஜெயகோபால் உள்ளிட்டோர் உணவை பாதுகாப்பாக சமைப்பது, பரிமாறுவது மற்றும் தூய்மை பணிகள் குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை சூடுபடுத்தி மறுமுறை பயன்படுத்த கூடாது, பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தாமல் வாழை இலைதான் பயன்படுத்தவேண்டும், கடைகளில் பணிபுரிவோர் கட்டாயம் முக கவசம், கையுறை அணியவேண்டும், சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

சாலையோரங்களில் குப்பைதொட்டி, கழிவறை, திறந்த சாக்கடை அருகில் கடை வைக்கவே கூடாது. பிளாஸ்டிக் கவரில் உணவுகள் வினியோகிக்கப்படுவது தவறு. சூடான உணவுகள் பிளாஸ்டிக் கவரில் வைக்கப்படும்போது, அது நச்சுத்தன்மை அடைகிறது. எனவே கண்டிப்பாக வாழை இலைதான் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கவரில் இட்லியும் அவிக்கக்கூடாது. மேலும் வியாபாரிகள் பணியின்போது பாக்கு, வெற்றிலை, புகையிலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

சிக்கன், மட்டன் துண்டுகளை வண்டியில் கவர்சிக்காக தொங்கவிடக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து உணவு கலப்படத்தை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்ட சாலையோர வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.