அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு தடய அறிவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்துக்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள், ஆவணங்கள் ஏதும் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் மொத்தம் ரூ.80 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை சுமார் 7.30 மணி முதல் அமலாக்கத் துறை சோதனை நடந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை சைதாப்பேட்டை மற்றும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை நடந்தது. மேலும், விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி இல்லத்துக்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள், ஆவணங்கள் ஏதும் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், இந்த சோதனையின்போது, அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சத்தை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளராம்.

மேலும், இந்தப் பணம் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, கணக்கில் காட்டப்படாத பணம் என்பதால், அந்தத் தொகையை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அமைச்சர் பொன்முடியின் இல்லத்துக்கு நேற்று பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பான அதிகாரி, வங்கிக் கணக்கு விவரங்கள் தொடர்பான அதிகாரி வந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியன் வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் இருவரும் வரவழைக்கப்பட்டனர் என்று தெரிய வந்துள்ளது.