டில்லியில் கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா பிரதமரை சந்தித்தார்

டில்லி: டில்லியில் நடந்த சந்திப்பு... கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுடன் பிரதமர் மோடி டில்லியில் சுமார் 15 நிமிடங்கள் ரகசிய பேச்சு நடத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு 9 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதில் கர்நாடகமும் ஒன்று. எப்படியாவது 9 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது பா.ஜ.க.

இதையொட்டி தில்லியில் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்றனர்.

கர்நாடக பா.ஜ.க.விலிருந்து வயதை காரணம்காட்டி எடியூரப்பா ஓரங்கட்டப்பட்டாலும் அவர் கட்சியின் நாடாளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். மேலும் கர்நாடகத்தில் லிங்காயத்து சமூகத்தினருக்கு இடையே அவருக்கு அதிக செல்வாக்கு உள்ளது.

கர்நாடகத்தில் இப்போது தேர்தல் வர உள்ளதால் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க தில்லி வந்த அவரிடம் பிரதமர் மோடி தனியாக சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் நான்குமுறை கர்நாடகத்தில் பா.ஜ.க. முதல்வராக இருந்துள்ள அவருக்கு மீண்டும் மாநில அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற வதந்தி உலவுகிறது.

எடியூரப்பாவுக்கு பிறகு பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றாலும் அவருக்கு பெரிய செல்வாக்கு ஒன்றும் இல்லை. மேலும் அவருக்கு மக்களிடம் நல்ல பெயரும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

பசவராஜ் பொம்மை பதவியேற்றதிலிருந்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அவரை எல்லோரும் '40% கமிஷன் முதல்வர்' என்றே கூறிவருகின்றனர். ஆனாலும் கட்சித் தலைமை அவரை மாற்றாமல் உள்ளது. அதோடு அவரது தலைமையிலேயே வரும் தேர்தலை சந்திக்க உள்ளது.

கர்நாடகத்தில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என்று கூறியுள்ள அமித்ஷா, மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 136 தொகுதிகளை எப்படியாவது வென்றெடுக்க வேண்டும் என்று மாநில பா.ஜ.க.வினருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், இந்த முறை காங்கிரஸ் மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில் பா.ஜ.க.வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

இந்த சூழ்நிலையில்தான் மீண்டும் எடியூரப்பாவை மாநில அரசியலில் களம் இறக்கி வெற்றிக்கனியை பறிக்கலாம் என பா.ஜ.க. கருதுவதாகத் தெரிகிறது. அதன் காரணமாகவே மோடி, எடியூரப்பாவுடன் ரகசிய பேச்சு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.