முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

மதுரை: காலமானார்... தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா (77) மதுரையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானார்.

இவர் கடந்த 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார். 1977, 1980, 1984, 1991 ஆகிய 4 முறை சேடப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் சேடப்பட்டியார் என அழைக்கப்பட்டார்.

பெரியகுளம் மக்களவை தொகுதி உறுப்பினராக 2 முறை பதவி வகித்த சேடப்பட்டி முத்தையா, 1999-இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவில் தேர்தல் பணி குழு தலைவராக கடந்த 16 ஆண்டு காலமாக பொறுப்பு வகித்தார்.

சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் மு.மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது இறுதிச் சடங்கு திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூர் பகுதியை அடுத்த முத்தப்பன்பட்டியில் அவரது தோட்டத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.