கோவையில் குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு... ஆட்சியர் தகவல்

கோவை: இலவச பயிற்சி வகுப்புகள்... கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் குரூப் -1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:


தமிழகத்தில் துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், உதவி இயக்குநா் உள்ளிட்ட பிரிவுகளில் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் -1 தோ்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரா்கள் தோ்வினை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் குரூப்-1 தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் உள்ளிட்ட தோ்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

மேலும், குரூப் -1 தோ்வுக்கு சம்பந்தமான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். எனவே அரசுத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.