இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் இன்று தொடங்கியது

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் இன்று தொடங்கியது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட இருக்கிறது.

இந்த பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, 14 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

அவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்த காரணத்தினால் அது தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் இன்று தொடங்கியது.

நடப்பு கல்வியாண்டுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை இ-பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அரசு நடத்துகிறது. 2021ல் நீட் தேர்வு நடைபெறும் முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.