உத்தரபிரதேசத்தில் ரக்‌ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்

நாளை ரக்‌ஷா பந்தன் விழாவானது நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்த ரக்‌ஷா பந்தன் விழாவானது சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விழாவாகும். இந்தியாவில் பெரும்பாலும் வடமாநிலங்களிலே இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படும்.

கொரோனா காரணமாக பல்வேறு விழாக்கள், முக்கிய பண்டிகைகள் வீட்டிலே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தன் விழா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீடுகளிலே விழாவை கொண்டாட மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். தற்போது ரக்‌ஷா பந்தன் விழாவை முன்னிட்டு உத்தரபிரதேச மாநில அரசு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் விழாவான நாளை உத்தரபிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்துவகை பேருந்துகளிலும் பெண்கள் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.