அமெரிக்காவில் பேன்கள் கடித்து சிறுமி உயிரிழப்பு

அரிசோனா : அமெரிக்காவில் அரிசோனா மாகாணம் டுக்சன் நகரில் சிறுமி ஒருவர் வசித்து வந்தார். பேன்கள் காரணமாக சிறுமிக்கு தலையில் பயங்கர அரிப்பு ஏற்பட்டது. சிறுமியின் தாயார் சான்ட்ரா தனது காதலருடன் வேறு வீட்டில் வசித்து வந்ததால், அந்த சிறுமி தனது பாட்டி எலிசபெத்துடன் வசித்து வந்தார்.

ஆனால், பாட்டி எலிசபெத் தனது பேத்தியை சரியாக கவனிக்கவில்லை. இதனையடுத்து, சிறுமியின் தலையில் பேன்கள் அதிகமாகி, தலையில் அரிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனால், சிறுமியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல் வீட்டிலேயே அடைத்து வைத்தனர்.

ஒரு கட்டத்தில் சிறுமியின் தலையில் பேன்களின் எண்ணிக்கை அதிகரித்து, தலையில் பல இடங்களில் காயம் உருவாகி தொற்று ஏற்பட்டது. சில நாட்களில் அந்த தொற்று முகத்துக்கும் பரவியது. இதனால் சிறுமியின் முகம் வீங்கியது. சிறுமி ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தலையில் இருந்த பேன்களால் தொற்று ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சிறுமியின் தாய் சான்ட்ரா, பாட்டி எலிசபெத் ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.