பயங்கரவாத நிதிஉதவி மேற்கொள்ள தங்கம் கடத்தப்படுகிறது; தேசிய விசாரணை முகமை சந்தேகம்

தங்கக் கடத்தல் மூலம் பயங்கரவாத நிதி உதவி மேற் கொள்ளப்படுவதாக சந்தேகப்படுவதாக தேசிய விசாரணை முகமை தெரிவித்துள்ளது.

தங்கம் என்பது நகைக்களுக்காகக் கடத்தப்படுவதில்லை. சில பயங்கரவாத அமைப்புகள் ரொக்கத்தை கையாள முடியாத நிலையில் இருக்கும் போது தங்கம் மூலமே பரிவர்த்தனைகள் நடக்கின்றன என்று கேரளாவில் பற்றி எரியும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேசிய விசாரணை முகமை சிறப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

தங்கக் கடத்தல் மூலம் பயங்கரவாத நிதி உதவி மேற்கொள்ளப்படுவதாக தாங்கள் சந்தேகப்படுவதாக தேசிய விசாரணை முகமை ஐயம் வெளியிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது சட்ட விரோத தடுப்புச் செயல்கள் சட்டம் எப்படி பாயும் என்று என்.ஐ.ஏ. கோர்ட் எழுப்பிய கேள்விக்கு விசாரணை அமைப்பு இவ்வாறாக பதில் அளித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர் மீது சட்டவிரோத தடுப்புச் செயல்கள் சட்டத்தின் 16 மற்றும் 17ம் பிரிவின் கீழ் குற்றம்சாட்டியுள்ளது என்.ஐ.ஏ. இது பயங்கரவாத நிதி உதவிக்கு தண்டனை வழங்கும் சட்டமாகும். இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயார் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது என்.ஐ.ஏ.

தூதரகத்தில் இருந்து வந்ததாக தங்கத்தை காட்டுவதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆவணங்களில் மோசடி செய்துள்ளனர் என்று என்.ஐ.ஏ. கோர்ட்டில் தெரிவித்தது. போலி ஆவணங்கள் மூலம் 3 முறை தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் வழக்கு குறித்த டைரியையும் என்.ஐ.ஏ. கோர்ட்டில் சமர்ப்பித்தது. இதனையடுத்து ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரையும் ஜூலை 21, காலை 11 மணி வரை என்.ஐ.ஏ. காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சந்தீப் நாயர் கோர்ட்டில் கூறும்போது, ரஷீத் என்பவர்தான் வீசா உள்ளிட்ட பிற வசதிகளையும் இந்தக் கடத்தலுக்காகச் செய்து கொடுத்தார் அவர் மீது எந்த விசாரணையும் ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பினார். தன் மீது தேவையில்லாமல் என்.ஐ.ஏ. நடவடிக்கை எடுக்கிறது என்று அவர் கோர்ட்டில் தெரிவித்தார்.