கூகுள் பயனுக்கு வந்து கால் நூற்றாண்டு ஆகிறது... 25வது பிறந்தநாள்!!!

நியூயார்க்: 25வது பிறந்தநாள் கொண்டாட்டம்... இணைய தேடு பொறி தளத்தில் பல இருந்தாலும்.. இணையம் என்றாலே அது கூகுள்தான் என்ற பிம்பம் உருவாகியுள்ளது. அப்படி மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்துவிட்டு கூகுள் தளம் இன்று தன்னுடைய 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

1998ம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று, கூகுள் தனது தேடுபொறியை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிறகுதான் இணையத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது எனலாம். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவரும் கூகுள் சர்ச் எஞ்சின், இன்று அதன் 25 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
இணையத்தின் ஆரம்ப நாட்களில், ஆன்லைனில் ஒரு தகவல்களைக் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகும். அச்சமயத்தில் இருந்த தேடுபொறிகள் மக்களுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதை அறிந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற இரண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கு ஒரு தீர்வு காண விரும்பினர்.

ஒரு சிறிய கேரேஜில் உலகின் தகவல்களை ஒழுங்கமைப்பதற்கும், அதை உலகளவில் எல்லா மக்களும் அணுகக்கூடிய வகையில் பயனுள்ள ஒரு தேடுபொறியை உருவாக்கும் பணியைத் தொடங்கினர். அவர்களின் அந்த முடிவு இணையத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

கூகுள் தேடுபொறியின் சிறப்பம்சமே. அதன் தேடல் வழிமுறை, பேஜ் தரவரிசை, வலைத்தளங்களின் தரம் மற்றும் நாம் என்ன டைப் செய்கிறோமோ அதன் அடிப்படையில் தேடல் முடிவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகும்.

இந்த கண்டுபிடிப்பு பயனர்களுக்கு முன்பை விட துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்கியது. இதனால் கூகிள் விரைவாக மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் சர்ச் எஞ்சினாக மாறியது.

கூகுள் தனது 25 வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்நாளில், உலகில் அதனால் ஏற்பட்ட தாக்கத்தை அளவிட முடியாதது என்பது தெளிவாகிறது. இதன் வளர்ச்சிப் பாதையைப் பார்க்கும்போது, அடுத்த சில ஆண்டுகளில் கூகுளில் இருந்து பல அற்புதமான கண்டுபிடிப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்.