லாரியின் பின்னால் அரசு பஸ் மோதி விபத்து: டிரைவர் பலி; 17 பயணிகள் படுகாயம்

நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலூரில் உள்ள நான்கு வழிச்சாலையில் கூத்தப்பன்பட்டி பகுதியில் லாரி ஒன்று வந்தபோது, டயர் பஞ்சரானது. இதனால் அந்த லாரியை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்ற அரசு விரைவு பஸ் அந்த வழியாக வந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நின்ற லாரியின் பின்னால் அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் நெல்லையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சங்கரன்(வயது 45) படுகாயம் அடைந்து இருக்கையிலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சில் இருந்த 17 பயணிகளும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பஸ்சில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பஸ்சின் இருக்கையிலேயே பிணமான டிரைவர் சங்கரன் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்கு இடையே அவரது உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் ஆம்புலன்சில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.