ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு 14% வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு

தமிழகம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான பல வகை சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உள்ளது. ஆனால், ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு வழங்காமல் கூட்டுறவுத்துறை அமைப்பு நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் விரைவில் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அவ்வப்போது ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

மேலும், ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கைகளை வைத்த பின்னர் முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த விவகாரத்தை கவனம் செலுத்திய பின்பு அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், எந்த தகவலும் வெளிவராத காரணத்தினால் அவ்வப்போது ரேஷன் கடை ஊழியர்கள் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே ஒரு மாதத்திற்குள் ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14 சதவீதமாக இருந்தது. தற்போது மேலும் 14 சதவீதம் உயர்த்தப்பட்டு 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ரேஷன் கடைகளில் மொத்தமாக 19,658 விற்பனையாளர்களும், 2852 கட்டுநர்களும் வேலை பார்த்து வருகின்றனர். அரசின் அறிவிப்பால் கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி சம்பள உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.