ஹாரியை மன்னிக்க மாட்டார்... அரச குடும்ப எழுத்தாளர் தகவல்

பிரிட்டன்: ஹாரியை மன்னிக்க மாட்டார்... இளவரசர் வில்லியம் அரச குடும்பத்திற்கு எதிரான நடத்தைக்காக ஹாரியை மன்னிக்க மாட்டார் என அரச குடும்ப எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் அரச பதவிகள் அனைத்தையும் துறந்ததுடன், பிரித்தானியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.

அத்துடன் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதில் இருந்து தொடர்ந்து அமெரிக்க ஊடகங்களில் அடிக்கடி தோன்றிய சசெக்ஸ்கள் அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்தனர். இதனால் அரச குடும்பத்திற்கும் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஜோடிக்கு இடையே கடுமையான உறவு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், ராணியின் மரணத்தைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக விண்ட்சர் கோட்டையில் காத்து இருந்த நலம் விரும்பிகளை இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி, இளவரசிகள் கேட் மற்றும் மேகன் ஆகிய நால்வரும் இணைந்து சந்தித்தனர்.

இருப்பினும் இளவரசர் வில்லியமும், ஹாரியும் நலம் விரும்பிகளை இணைந்து சந்தித்த போதிலும், சகோதரர்கள் இடையிலான பிளவு தொடர்ந்து நீடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அரச குடும்பத்தின் அடுத்த தலைமுறை பற்றி விவாதிக்கும் “தி நியூ ராயல்ஸ்” புத்தகத்தின் ஆசிரியர் கேட்டி நிக்கோல், அரச குடும்பத்துடன் நடந்து கொண்ட விதத்திற்காக ஹாரியை இளவரசர் வில்லியத்தால் மன்னிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட பிளவைக் குணப்படுத்தும் முயற்சியில் ராணி இரண்டாம் எலிசபெத் சோர்ந்து போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.