கனமழை..கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

கேரளா: கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கேரளா மாநிலத்தில் வரும் புதன்கிழமை வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. மேலும், கூடுதல் கனமழையால் நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல நாளை கேரளா மாநிலத்தின் 8 மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி 12 மாவட்டங்களுக்கும் மற்றும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கனமழையின் காரணமாக கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தனம்திட்டா மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.