வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூரில் கொட்டிய கனமழை

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து மாவட்டமே வெள்ளக்காடானது. குடியிருப்புகளும் வெள்ள நீரில் மிதந்தன. தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். பெரும் பயிர் சேதத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் கடலூர் மாவட்டம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மிதமானது முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் கடந்த ஒருவாரமாக நீடித்த வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக சுமார் 2 மணி நேரம் கொட்டியது.

அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மட்டும் 2 மணி நேரத்தில் 5 செ.மீ. மழை கடலூரில் பதிவானது. இரவு வரையிலும் விட்டு, விட்டு பெய்த கனமழையால் குடியிருப்புபகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கத் தொடங்கியது. கடலூர் நகரில் ஏராளமான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் மோட்டார் மூலம் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதோடு ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் இருந்து விவசாயிகள் தண்ணீரை வடியவைத்து வந்த நிலையில், இடைவிடாது பெய்த இந்த மழையால் அவர்கள் மேலும் வேதனைக்கு உள்ளானார்கள். மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் நிலைமை மேலும் மோசமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.