விருதுநகர், சிவகங்கையில் கனமழை; கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள அறிகுறி என்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கட்டங்குடி, பாளையம்பட்டி, ஆத்திப்பட்டி, காந்திநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

இராஜபாளையம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தளவாய்புரம், சேத்தூர், முறம்பு, சத்திரபட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் தென்னை, மா, கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழையின் காரணமாக புளியமரம் சாலையில் சாய்ந்ததால் வாகனங்கள் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தின் கிளைகள் மின்சாரக் கம்பியில் விழுந்ததில் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனிடையே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் நிலையில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழையும், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.