மூலிகை ஆம்லெட், என் 95 சிக்கன் அறிமுகம் செய்து அசத்தும் மதுரை உணவகம்

கொரோனா பெயரை வைத்து விதவிதமான உணவு வகைகளை அறிமுகம் செய்வது அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனோ போண்டா, பரோட்டா என்று. இப்போது அசைவ உணவுகளும் கொரோனா பெயரில் அறிமுகம் ஆகி உள்ளது.

பிரபல அசைவ உணவகத்தில் கொரோனா மூலிகை ஆம்லெட், என் 95 சிக்கன் என்ற பெயரில் புதிய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள, ‘வெஸ்டர்ன் பார்க் அர்ச்சனா’ ஓட்டலில் கொரோனா மூலிகை ஆம்லெட், என் 95 சிக்கன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஓட்டல் நிர்வாக பங்குதாரர் செல்வம் கூறியதாவது:

மதுரையில், கொரோனா போண்டா, தோசை, மாஸ்க் பரோட்டா தயாரித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எங்களுடையது, அசைவ உணவகம் என்பதால், அதற்கு ஏற்ப விழிப்புணர்வு உணவுகளை தயாரிக்க திட்டமிட்டோம்.’செப்’ குழுவினருடன் ஆலோசனை செய்து, மஞ்சள் பொடி, துளசி, இஞ்சி கலந்த கொரோனா மூலிகை ஆம்லெட்டை அறிமுகம் செய்தோம்.

மக்களுக்கு, மாஸ்க் அணிவதன் அவசியத்தை உணர்த்த, என் 95 சிக்கன், சைவ உணவு பிரியர்களுக்காக, கொரோனா பன்னீர் லாலிபாப் தயாரிக்கிறோம்.ஓட்டலுக்கு சாப்பிட, பார்சல் வாங்க வருவோருக்கு, இலவசமாக மாஸ்க் தருகிறோம். உடல் வெப்பநிலை பரிசோதனை, கைகளை சுத்தம் செய்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றுகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.