சசிகலாவுடன் மீண்டும் இணையும் அவரது சகோதரர் திவாகரன்

சென்னை: மீண்டும் இணைகின்றனர்... சசிகலாவும் அவரது சகோதரர் திவாகரனும் மீண்டும் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சசிகலாவின் தம்பி திவாகரன். இவருக்கும் அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கும் இடையே மோதல் போக்கு உண்டானது. இதையடுத்து 2018ஆம் ஆண்டு தனி கட்சியை உருவாக்கினார் திவாகரன். அதற்கு அண்ணா திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார். அப்போது சசிகலாவின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று சசிகலா சார்பில் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால் சசிகலா, திவாகரன் உறவில் பிளவு ஏற்பட்டது. சசிகலாவைத் தனது முன்னாள் சகோதரி என்று அறிவித்தார் திவாகரன். அதுபோன்று தினகரன் சசிகலாவுடன் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அவரும் தனியாகவே தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் திவாகரன், சசிகலாவுடன் மீண்டும் இணையவுள்ளார்.

இதுகுறித்து சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு வெளியான அறிக்கையில், “ “சின்னம்மா தலைமையில் அதிமுகவோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா தஞ்சாவூரில் வருகிற 12ஆம் தேதி காலை 11 மணியளவில் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்குள் கடும் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், தன்னை பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு சசிகலா புரட்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சசிகலாவுடன் திவாகரன் கட்சி இணைப்பு செய்தி வெளியாகியுள்ளது. ஸ்ரீவாரு மண்டபத்தில் ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற இருக்கும் நிலையில், நாளை மறுநாள் தஞ்சையில் நடக்கும் இந்நிகழ்வு தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.