இட்டாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் ஜூலை 1 வரை விடுமுறை

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தலைநகர் இட்டாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (ஜூன் 29) முதல் ஜூலை 1 வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட இருக்கிறது.

அருணாச்சல பிரதேச தலைநகர் இட்டாநகர் பிராந்தியத்தில் (ICR) கனமழை தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிப்பதாக ICR மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் பிரிவு 33ஐ பயன்படுத்தி, பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன், நிலைமை மதிப்பிடப்படும் என்று துணை ஆணையர் டாலோ போட்டோம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடப்படுவது மாணவர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அம்மாநிலத்தில் இடைவிடாத மழை காரணமாக இட்டாநகரில் உள்ள பல்வேறு இடங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.