டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்து அவருக்கு ஆதரவாளராக இருந்தேன் - ஒசாமா பின்லேடனின் மருமகள்

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி மோதி வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டார்.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் அமெரிக்க படையினர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், டிரம்பால் மட்டுமே இரட்டை கோபுர தாக்குதல் போன்ற மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடக்காமல் தடுக்க முடியும் என்று ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின் லேடின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நூர் பின் லேடின் பேட்டியில் கூறுகையில், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ‘செப்டம்பர் 11’ தாக்குதலை போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடும். ஒபாமா, பைடன் ஆட்சி நிர்வாகத்தில ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பெருகியது. வெளிநாட்டு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவையும் எங்களையும் டிரம்ப் திறம்பட காப்பாற்றி வருகிறார் என்று கூறினார்..

மேலும் அவர், 2015-ல் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்து நான் டிரம்ப்பின் ஆதரவாளராக இருந்தேன். நான் அந்த மனிதரை தூரத்திலிருந்தே பார்த்தேன். அவரின் உறுதியான தீர்மானங்களை பாராட்டுகிறேன். அவர் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்துக்கும் இன்றியமையாதது என்று தெரிவித்துள்ளார்.,