தேர்தலின் போது ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்; கமல் தகவல்

ஆதரவு கேட்பேன்... சட்டமன்றத் தேர்தலின் போது ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். அண்மையில் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்றார். இந்நிலையில் இன்று அவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களை கமல் சந்தித்தபோது, ரஜினி நடத்திய கூட்டம் பற்றியும் அவரிடம் ஆதரவு கேட்பீர்களா என்றும் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “பிரச்சாரம் பண்ணும்போது நான் எல்லாருடைய வீட்டுக்கும் செல்வதாக இருக்கிறேன். என் நண்பன் வீட்டை விட்டு விடுவேனா? அவருடைய ஆரோக்கியத்தில், அரசியலை விட எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை என்னுடைய தொழிலைவிட அரசியலில் ஆர்வம் அதிகம். அதனால்தான் தொழிலை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு இதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனவே ரஜினி நலமாக இருக்க வேண்டியது என்பதற்குதான் நான் முன்னுரிமை கொடுப்பேன்.

நாங்கள் திரையுலகில் போட்டியாளர்களாக இருந்தோமே தவிர பொறாமைக்காரர்களாக இல்லை. அரசியலிலும் அது தொடரும், தொடரலாம்” என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார் கமல்ஹாசன்.

ரஜினி நடத்திய மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தான் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை தனது உடல் நிலையை காரணம் காட்டி தெளிவுபடுத்தியிருந்த நிலையில் கமல் இவ்வாறு கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.