நிரவ் மோடியை இந்திய சிறையில் அடைத்தால் அவர் தற்கொலை செய்யும் ஆபத்து உள்ளதாக வக்கீல் தகவல்

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து பின் லண்டனுக்கு தப்பி சென்றார். லண்டனில் தங்கி இருந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி, இந்தியாவின் வேண்டுகோளின்பேரில் கைது செய்யப்பட்டார். தற்போது வரை, லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கோர்ட்டுகளில் வழக்கை எதிர்கொள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த மே மாதம் 5 நாட்கள் நடைபெற்றது. 2-ம் கட்ட விசாரணை நேற்று முன்தினம் அதே கோர்ட்டில் தொடங்கியது. லண்டன் சிறையில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார்.

2-வது நாளான நேற்று, நிரவ் மோடி தரப்பு வக்கீல் கிளாரி மோன்ட்கொமேரி தனது வாதத்தை தொடங்கியபோது, இந்தியாவில் நீதித்துறையின் நேர்மை கணிசமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. அவருக்கு நேர்மையான விசாரணை கிடைக்காது. நிரவ் மோடி விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. அவர் நிரபராதி என்று யூகிக்கக்கூட மறுக்கிறார்கள். அவர் அங்கு வெறுக்கப்படும் நபராக பார்க்கப்படுகிறார் என்று கூறினார்.

மேலும் அவர், லண்டன் சிறையில் நிரவ் மோடியின் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் நாடு கடத்தப்பட்டு, இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டால், அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளது. அவர் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் சிறையில் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவார் என்ற இந்திய அரசின் வாக்குறுதியும், சிறை வீடியோவும் போதுமானது அல்ல. ஆர்தர் ரோடு ஜெயிலில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இந்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று வாதிட்டார்.