பாஜக இருந்தால் இந்தியாவே உருப்படாது... அமைச்சர் பொன்முடி விமர்சனம்

திருவள்ளூர்: பாஜக இருந்தால் இந்தியாவே உருப்படாது என்றும் ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே தேர்தல் என கூறுபவர்கள் இன்னும் சில காலங்கள் சென்றால் ஒரே சாப்பாடு என்பார்கள் அதனை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பூந்தமல்லி நகர திமுக சார்பில் தமிழக மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் ஈரோடு இடை தேர்தல் வெற்றிக்கான பொது கூட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் நடைபெற்றது.

பூந்தமல்லி நகர செயலாளர் திருமலை தலைமையில் நடைபெற்ற விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில். இறந்து போனவர்களுக்கு கொடுப்பது சடங்கு, சம்பிரதாயம் ஆனால் நாம் தலைவர் பிறந்த நாளை சடங்கு, சம்பிரதாயமாக அல்ல அவர் எந்த கொள்கைக்காக போராடினாரோ அந்த கொள்கைகளை எடுத்துரைப்பதற்காக பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.

குல கல்வி முறையை பாஜக கொண்டு வர முயற்சி செய்கிறது எனவும் தமிழ் முக்கியம் என உணர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார். மேலும் தற்போது தேர்தல் வாக்குறுதி போல் மகளிருக்கும் ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்து விட்டார். நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல மதத்தால் அடிமை படுத்துபவர்களுக்கு எதிரானவர்கள் எனவும் மதத்தை சொல்லி பிரிக்க நினைப்பவர்கள் தான் பாஜகவினர் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பாஜக இருந்தால் இந்தியாவே உருப்படாது என்றும் ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே தேர்தல் என கூறுபவர்கள் இன்னும் சில காலங்கள் சென்றால் ஒரே சாப்பாடு என்பார்கள் அதனை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது என பேசினார். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சில்வர் குடம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.