பொறியியல் கலந்தாய்வில் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 440 க்கு மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் 2022-23ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் கலந்தாய்வில் கலந்து கொள்ள 1.60 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

இதை அடுத்து இந்த மாணவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 10 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 15 ஆம் தேதி வரை நடந்து முடிந்துள்ளது. அதில் சுமார் 17258 மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

அதில் 14 ஆயிரத்து 524 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீடு ஆணைகளை உறுதி செய்தனர். அவர்களில் 6277 மாணவர்கள் மட்டுமே இறுதியாக கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். மேலும் இன்னும் 4430 மாணவர்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்பதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வில் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் செப். 22 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் விரைவாக கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.