பிபிசி அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

டெல்லி: எதிர்கட்சிகள் கண்டனம்... டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த மோதல்கள் குறித்த இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படம் சில வாரங்களுக்கு முன்பு லண்டனைச் சேர்ந்த பிபிசியால் வெளியிடப்பட்டது.

பிரதமர் மோடிக்கு எதிராக வெளியான ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த ஆவணப்படம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

சர்வதேச வரி விவகாரங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும் இன்று 3வது நாளாக பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை தொடர்பாக பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் விடுமுறையில் சென்று வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டனர் .