மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கடந்த வாரம் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

தற்போது பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் நேற்று மதியம் முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,522 கனஅடியில் இருந்து 17,937 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.50 அடியாகவும், நீர்இருப்பு 52.08 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.

தற்போது மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத் தேவைக்காக காவிரியில் 9,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அதே போல் கிழக்கு, மேற்கு கால்வாயில் 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.