காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பெய்த மழையால் அணைத்து அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வருகின்றன. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று 5 ஆயிரத்து 800 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 6 ஆயிரத்து 139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து காவிரியில் 500 கன அடியும், கால்வாயில் 500 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 102.82 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 103.14 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.