காவிரி ஆற்றில் பெருகும் வெள்ளம்..மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு ..

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணை மளமளவென நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளன.கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் நீர்வரத்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக இருந்தது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணை மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை 110 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம். இன்று 113 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் இரண்டு நாட்களில் 13 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் 124 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை இன்னும் சில தினங்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறுவை சாகுபடிக்காக கடந்த மே மாத இறுதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணை நிரம்பும் பட்சத்தில் அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.