சீன தூதரின் கருத்துக்கு இந்திய தூதரகம் அளித்த பதிலடி

கொழும்பு: சீன தூதரின் கருத்துக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் பதிலடி கொடுத்துள்ளது.

சீன ராணுவத்தின் உளவு கப்பலான 'யுவான் வாங்-5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறை முகத்துக்கு வர இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து இந்தியா கவலை தெரிவித்ததால் கப்பல் வருகையை ஒத்தி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டது.

ஆனால் அதை சீனா ஏற்க மறுத்ததால் கப்பல் வருகைக்கு இலங்கை அனுமதி அளித்தது. ஒரு வாரம் இலங்கை துறை முகத்தில் இருந்த சீன கப்பல் கடந்த 22-ந்தேதி புறப்பட்டு சென்றது. இதற்கிடையே இலங்கைக்கான சீன தூதர் ஜென் ஹோங் எழுதிய கட்டுரையில் இந்தியாவை விமர்சனம் செய்திருந்தார்.

அதில், இலங்கையில் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீதான மீறல்களை சீனா பொறுத்து கொள்ளாது. பாதுகாப்பு கவலைகள் என்று கூறி சிலர் ஆதாரம் இல்லாமல் இலங்கை உள் விவகாரங்களில் தலையிடுவது நடை முறையில் உள்ளது. இலங்கையை சில நாடுகள் கொடுமைப்படுத்துவதற்கும், இறையாண்மை, சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கவும் ஆதார மற்ற தகவல்களை கூறுகின்றன என்று தெரிவித்து இருந்தார்.

சீன தூதரின் இந்த கருத்துக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது:- சீன தூதரின் கருத்துகள் குறித்து கவனம் செலுத்தி உள்ளோம். அடிப்படை ராஜதந்திர நெறிமுறைகளை அவர் மீறுவது, ஒரு தனிப்பட்ட பண்பாடுகளோ அல்லது ஒரு தேசிய அணுகு முறையின் பிரதிபலிப்பாகவோ இருக்கலாம். இந்தியாவை பற்றிய சீனத் தூதரின் பார்வை அவரது நாடு எப்படி நடந்து கொள்கிறது என்பதை பொறுத்து இருக்கலாம்.

ஆனால் இந்தியா அவ்வாறு இல்லை என்பதை அவருக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி கப்பலின் வருகையுடன் சீன தூதர் பூகோள அரசியல் சூழலை பொருத்தும் அவரது நடவடிக்கை ஒரு பாசாங்கான செயலாகும். இலங்கைக்கு தற்போது ஆதரவு, உதவி தேவையாக உள்ளதே தவிர தேவையற்ற அழுத்தங்களோ அல்லது தேவையற்ற சர்ச்சைகளோ அல்ல.

கடன்களை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகள் குறிப்பாக சிறிய நாடுகளுக்கு மிகவும் பெரிய சவாலாக உள்ளன. இதற்கு சமீபத்திய சம்பவங்கள் ஒரு எச்சரிக்கை ஆகும் என்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சீனா அதிகளவில் கடன் கொடுத்து அதன் வலையில் சிக்க வைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.