குமரி மாவட்டத்தில் புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

நிவர் புயலை வங்க கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது புயலாக உருவெடுத்து உள்ளது. இந்த புரெவி புயல் இன்று இலங்கை கடலோர பகுதியை அடைந்து நாளை மன்னார் வளைகுடா பகுதியை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் புரெவி புயல் தென்தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புரெவி புயல் கரையை கடக்கும்போது, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலில் சூறைக்காற்று வீசும் என்றும், இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து தென்மாவட்டங்களில் புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக புயல் பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களை உடனடியாக அப்புறப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. குமரி மாவட்டத்தில் புரெவி புயல் கரையை கடக்கும்போது வீசும் பலத்த காற்றாலும், மழையாலும் கடற்கரை கிராமங்கள் உள்பட 75 பகுதிகளில் ஆபத்து ஏற்படலாம் என மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது.

இந்த பகுதிகளில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நாகர்கோவில், குளச்சல் பகுதியிலும், விளவங்கோடு தாலுகா பகுதியிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை இம்முகாம்களுக்கு அழைத்து வர அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் புயல் பாதிப்பின் போது மக்களை மீட்கவும், பாதிப்புகளை மின்னல் வேகத்தில் சீரமைக்கவும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்திற்கு 3 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வந்துள்ளனர். அவர்கள், கன்னியாகுமரி, குளச்சல் மற்றும் நாகர்கோவில் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இன்று காலையில் அவர்கள் கன்னியாகுமரி, குளச்சல் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். கடற்கரைக்கு வந்தவர்களையும் திருப்பி அனுப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜோதி நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றே நாகர்கோவில் வந்தார். மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.