கடந்த 24 மணிநேரத்தில் 13 மாநிலங்களில் கொரோனா புதிய பாதிப்பு இல்லை; மத்திய அமைச்சர் தகவல்

கொரோனாவால் புதிய பாதிப்பு ஏதும் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 13 மாநிலங்களில் ஏற்படவில்லை என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 52,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 3,561 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு, 89 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,084 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இறப்பு விகிதம் 3.3 சதவீதமாகவும், குணமடைபவர்கள் விகிதம் 28.83 சதவீதமாகவும் சிறந்த நிலையில் உள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள 35,902 நோயாளிகளில், 4.8 சதவீதம் பேர் ஐ.சி.யு.,விலும், 1.1 சதவீதம் பேர் வென்டிலேட்டர்களிலும், 3.3 சதவீதம் பேர் ஆக்ஸிஜன் ஆதரவிலும் உள்ளனர்.

நாடு முழுவதும் 180 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களாக புதிதாக எந்த பாதிப்பும் பதிவாகவில்லை. அதேபோல் 164 மாவட்டங்களில் 14 முதல் 20 நாட்களாக கொரோனா தொற்று இல்லை. 136 மாவட்டங்களில் கடந்த 21 முதல் 28 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த 24 மணிநேரத்தில் சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கேரளா, மிசோரம், மணிப்பூர், கோவா, மேகாலயா, லடாக், அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் அந்தமான் - நிக்கோபார் தீவுகள் ஆகிய 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொற்று கூட பதிவாகவில்லை. டாமன் மற்றும் டையூ, சிக்கிம், நாகாலாந்து மற்றும் லட்சத்தீவுகளில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

கொரோனா சோதனை திறன் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 327 அரசு மற்றும் 118 தனியார் ஆய்வகங்களில் தினமும் 95,000 சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக, இதுவரை 13,57,442 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது 1,50,059 படுக்கைகள் (1,32,219 தனிமை மற்றும் 17,840 ஐ.சி.யூ படுக்கைகள்) உள்ளன. மத்திய அரசு சார்பில் இதுவரை 29.06 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) மற்றும் 62.77 லட்சம் என்-95 மாஸ்க்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.