விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு நிவாரணம்... நிவர் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துளளார்.

தமிழகத்தை உலுக்கிய நிவா் புயல் ஆந்திர மாநிலத்திலும் சேதத்தை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக ஏரிகள் குளங்கள் நிரம்பி சித்தூா், கடப்பா, நெல்லூா் உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

மேலும் மழைநீரில் மூழ்கி பயிர்களும் நாசமாயின. இந்நிலையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நிவர் புயலால் ஆந்திரத்தில் 17.5 லட்ச ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.35,000 வழங்க வேண்டும். அவற்றில் ரூ10 ஆயிரத்தை அடுத்த இரண்டு நாள்களில் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிடில் டிச.7ஆம் தேதி மாநில முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சியினர் நவ.30 ஆம் தேதி சட்டப்பேரவைக்கு வெளியே பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.