சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை பலமடங்கு உயர்வு

ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்ததன் காரணமாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி விட்டதாலும், துபாய், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளதாலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.3,132 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரம் முன்பு வரை மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.875 ரூபாய் முதல் ரூ.1,505 வரை விற்பனையான நிலையில், அதிரடியாக மல்லிகைப்பூ கிலோ 3,132 ரூபாயை எட்டியதால் மல்லிகைப்பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.