தயவு செய்து பேரறிவாளனுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுங்கள்; முதல்வருக்கு கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள்

பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை தனது டுவிட்டர் பக்கம் மூலம் வைத்துள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார். அவருடைய தாயார் அற்புதம்மாள் கடந்த பல ஆண்டுகளாக தனது மகனின் விடுதலைக்காக போராடி வருகிறார்.

இந்த நிலையில் பேரறிவாளனின் கருணை மனு குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் முடிவெடுக்காமல் இருந்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் இது குறித்த வழக்கில் கவர்னருக்கு அதிருப்தியை தெரிவித்திருந்தது.

பேரறிவாளனின் கருணை மனு குறித்து முடிவெடுக்க இரண்டு ஆண்டுகள் அவகாசம் தேவையா? என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து பல அரசியல் கட்சி தலைவர்கள் பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக கவர்னர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் டுவிட்டர் கணக்கு டேக் செய்து 'தயவு செய்து பேரறிவாளனுக்கு நீதி கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுங்கள்' பல வருடங்களாக நீதிக்காக பேரறிவாளன் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் #TNCM_ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்கையும் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவீட்டில் குறிப்பிட்டு உள்ளார்