சர்வதேச மகளிர் தினத்தில் அனைவரையும் வியக்க வைத்த கேரளா அரசு

கேரளா: அனைத்து மாநிலத்தையும் வியக்க வைத்தது... சர்வதேச மகளிர் தினத்தில் அனைத்து மாநில அரசுகளும் வியக்கும் வகையில் எல்லோரையும் விட ஒருபடி மேலே சென்று பெண்களுக்கான சிறப்பானவற்றை கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (KSIDC) 'வீ-மிஷன் கேரளா' திட்டத்தின் கீழ் பெண்களுக்கான கடன் வரம்பை ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்துவது உட்படப் பெண் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்கான முக்கியத் திட்டங்களைச் சர்வதேச மகளிர் தினத்தன்று கேரள அரசு வெளியிட்டது.

பெண்களை வர்த்தகச் சந்தைக்குள் கொண்டு வரவும், அவர்களை வருமானம் ஈட்டும் நபராக மாற்ற வேண்டும் என்பதற்காகக் கடன்களுக்கான வரம்பை அதிகரித்து அசத்தியுள்ளது. இந்த 50 லட்சம் ரூபாய்க் கடனுக்கு வருகிற ஏப்ரல் 1 முதல் வெறும் 5 சதவீத வட்டியில் அளிக்கப்பட உள்ளது.

தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற பெண் தொழில்முனைவோர் கூட்டத்தில் இந்த முடிவை அறிவித்தார் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ். ஏப்ரல் 1, 2023 முதல் பெண் தொழில் முனைவோர் கோழிக்கோட்டில் உள்ள இன்குபேஷன் மையத்தில் 50 சதவீத வாடகை கொடுத்து வசதிகளைப் பெறலாம் என்றும் அமைச்சர் ராஜீவ் கூறினார்.

கேரள மாநிலத் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் 'வி-மிஷன் கேரளா' திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோருக்குக் கடன் தொகையை இரட்டிப்பாக்குக உயர்த்தியுள்ளது மூலம் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பெரிய அளவில் உதவும் எனக் கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார்.

பெண் தொழில்முனைவோரை அடையாளம் கண்டு, ஆதரவளித்து, ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள தள்ளுபடி காலம் அதாவது moratorium period, தற்போது ஆறு மாதங்களாக உள்ளது, இதை ஓராண்டாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் ராஜீவ் கூறினார்.

மகளிர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கூட்டு மானியம் அளிக்கப்பட உள்ளதாகவும் ராஜீவ் அறிவித்துள்ளார். இந்தப் புதிய கடன் சேவை ஏப்ரலில் செயல்படத் தொடங்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அல்லது ஏற்கனவே இருக்கும் மகளிர் கூட்டுறவுச் சங்கங்கள் தங்களது தொழிலை நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காகவும் வழங்கப்படும் என்று கேரள தொழில் துறை மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.