பெய்ரூட்டை ஒரு பேரழிவு நகரமாக அறிவித்து லெபனானில் தேசிய அவசரநிலை பிரகடனம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெய்ரூட் நகரமே இந்த விபத்தினால் உருகுலைந்தது. இந்த வெடிவிபத்து நடந்த சில வினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது. அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது.

துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி, துறைமுகப்பகுதியே நிலைகுலைந்து போனது. இந்த கோரவிபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வெடி விபத்தில் பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது விபத்துக்குள்ளான இந்த பெய்ரூட் நகரத்தை ‘பேரழிவு நகரம்’ என லெபனான் அதிகாரிகள் நேற்று அறிவித்தனர். இதுகுறித்து அந்நாட்டு தகவல்தொடர்பு மந்திரி மனல் அப்டில் சமத் நஜீத் கூறுகையில், தேசிய அவசரநிலை 2 வாரங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நாள் தொடர்ந்து நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு அதிபர் மைக்கில் அவுன் தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை அவசர அவசரமாக கூட்டப்பட்டபோது, அதில் பிரதமரும் பங்கேற்றார். அப்போது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவத்திற்கு முழுமையான மற்றும் உடனடியான அதிகாரம் வழங்கப்பட்டது. நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்பு மேற்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டது. மீட்புப்பணி, மருத்துவம், உணவு, தங்குமிடம் போன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் தீவிர நடவடிக்கை எடுக்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.