முந்தைய தொடர் வெற்றி போல இப்போதும் அ.தி.மு.க. தொடர் வெற்றி பெறும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தென்காசி அருகே உள்ள இலஞ்சிக்கு வந்திருந்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அவர்கள் இலஞ்சி சீனிவாச பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அமைச்சர்கள் இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

கடந்த 2011 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. அந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் 2016 தேர்தலில் 32 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா தன்னந்தனியாக போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றினார். அதேபோன்று 2016 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஜெயலலிதா நிறைவேற்றி வரும் சூழலில் அவர் மறைந்துவிட்டார். அதன்பிறகு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளையும் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளார்.

சிறந்த முறையில் அனைத்து துறைகளிலும் திட்டங்களை நிறைவேற்றியதால் முதலமைச்சர் செல்லும் இடங்கள் அனைத்திலும் அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். தைப்பொங்கலை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் அளவில் ஜெயலலிதா தொடங்கிய பொங்கல் பரிசுத்திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனி்சாமி விரிவுபடுத்தி இந்த ஆண்டு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளார். மக்களுக்காக செயல்பட்டு வரும் இந்த அரசு தொடர வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு வாக்களிக்கவும் தயாராக உள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. முந்தைய தொடர் வெற்றி போல இப்போதும் தொடர் வெற்றி பெறும் என அவர் கூறினார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், “நெல்லையில் ஜெயலலிதா ஆட்சியின்போது கால்நடை மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தார். தற்போது சங்கரன்கோவிலில் நெல்லையில் உள்ள ஆட்டினத்தை பாதுகாக்கும் வகையில் இரண்டரை கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டு அமைக்கப்படும்” என்றார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி, தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.